Friday, December 25, 2009

வேசியின் குரல் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக

நீ செய்வதற்கும்
நான் செய்வதற்கும்
விடை ஒன்று தான்.
அர்த்தங்கள் வெவ்வேறு.
பசி

காமம் என்னும் சொல்லை
உச்சரிக்க அஞ்சும்
உன் காலாச்சாரம் தான்
எமக்கு இன்னும்
சோறு போட்டு வருகிறது.

மனைவியின் நினைவு,
மனசாட்சியின் குரல்,
கடவுள் நம்பிக்கை.
என்னருகில் வருகையில்
அனைத்தும் கலற்றப்படுகிறது
உன் அழுக்குச்
சட்டையுடன் சேர்த்து.

'ஒருவனுக்கு ஒருத்தி'
விதிமுறைகள் காப்பதுண்டா?
எங்களுக்குள் உண்டு
தினம் தினம் இரவு..!

எம்மிடம் வருபவனுக்கும்
வராது மறுப்பவனுக்கும்
வேறுபாட்டிற்கு தமிழில்
அழகான ஒற்றைச் சொல்.
'பயம்'

உங்களுக்கு
செய்ய முடியா இன்பம்.
எங்களுக்கு
செய்ய முடியாவிடில் இன்பம்.

ஆணிடம் வேசி
அடிமையும் ஆகிறாள்.
ஆணிடம் அடிமைப்பெண்
வேசியும் ஆகிறாள்.

என்னை அவலம் பேசி
காதலியை கொஞ்சிப் பேசி
காதலிக்குள் என்னைத் தேடும்
காமுகனே காதலன்.

'இளங்கன்று பயம் அறியாது'
பழமொழிகள் எங்களிடம்
தோற்பதுண்டு.

பகல் முழுக்க
நடந்த விசாரணைக்கு
இரவு முழுக்க
தண்டனை வழங்கியது
உங்கள் நீதிமன்றம்..!!!