Monday, October 3, 2011
புத்திசாலித்தனத்தின் முட்டாள்தனம்
Saturday, June 18, 2011
அவன் இல்லை இவன்(பாலா)
அவன் இவன் படத்திற்கு விமர்சனம் எழுதுவதாக ஒரு துளி கூட எண்ணம் இல்லை. ஆனால் இந்த படம் ஒரு வித்தியாசக் காரணத்திற்காக விமர்சனம் எழுத வைக்கிறது. பொதுவாக நாம் விமர்சனம் எழுதக் காரணம், ஏதாவது நல்ல படைப்பு வெளியாகும். அதனை பெரும்பாலானோர் திட்டுவார்கள். நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக (நமக்கு புரிந்துவிட்டது என்பதைக் காட்டிக்கொள்வதற்காகவும் தான்) நாம் அதனைப் பாராட்டி விமர்சிப்போம். இங்கே கதை உல்ட்டா.
அவன் இவன் பொதுவாக மக்களிடைய அதிருப்தியையே ஏற்படுத்தி இருக்கிறது. படத்திற்கு அது தான் தகுந்த பதிலும் கூட. ஆனால் ஒரு வகையினர் இதனை பாராட்டியபடியே இருக்கிறார்கள். வெறும் படமாக அல்லாமல் பாலா படமாகவே. அப்படியாயின் என்ன அர்த்தம்? பாலா என்பவன் எப்படிப் பட்ட இயக்குனர் என்று அவர்களுக்கு அவரது முந்தைய படங்களால் புரியவில்லையா? போதாதற்கு நண்பன் சரவண கார்த்திகேயன் வேறு இப்படியொரு பதிவை எழுதிவிட்டான். நமக்கு கை சும்மா இருக்குமா. அதான் இந்தப் பதிவு.
இளம் இயக்குனர்களில் நான் முழுக்க முழுக்க நம்புவது பாலா மற்றும் செல்வராகவனை மட்டுமே. பருத்திவீரன் எடுத்த அமீர் கூட இல்லை. காரணம் இவர்கள் இருவரும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே பாலாவின் ரசிகனாகவே நான் படம் பார்க்கச் சென்றேன். எதிர்பார்ப்பு சற்று குறைந்திருந்தது. 'நான் கடவுள்' படத்தின் Scriptயில் உள்ள சில சிறிய குறைகள் காரணமாக இருக்கலாம். இருப்பினும் 'நான் கடவுள்' படத்தை நான் வெகுவாகப் பாராட்டவே செய்தேன். பல காரணங்கள். சரி.இப்போது 'அவன் இவன்'க்கு வருவோம்.
ஒழுங்காக போய்கொண்டிருந்த பாலா திடீரென முழு நகைச்சுவை படம் என்றார். பொதுவாக பாலா படங்களிலும் செல்வா படங்களிலும் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். சீரியசான பாடமாக இருந்தாலும் கூட. ஒரு வகையில் கமர்ஷியல் அம்சங்களை சொருகுவதில் இவர்கள் இருவரும் வல்லுனர்கள். ஆனால் அவை அனைத்தும் மிகவும் ரசிக்கும்படியான எதார்த்தமான நகைச்சுவைகள். பிதாமகன் படத்தில் சூர்யா விக்ரமைச் சந்திக்கும் முதல் காட்சியில் சூர்யாவை விக்ரம் பிராண்டியதும் அங்கிருக்கும் போலி சாமியார் கிழவனிடம் போய் சொல்வான். அதற்கு அவன் தன் கையில் இருக்கும் கட்டு போட்ட காயத்தை காண்பித்து முகத்தைத் திருப்பிக்கொள்வான். இது தான் பாலா டச். ஆனால் அவன் இவன் படத்தில் என்ன நடக்கிறது. நகைச்சுவை என்ற பெயரில் வெறும் கவிச்சி. ஒரு காட்சியில் மது அருந்திக்கொண்டிருக்கும் விஷாலைப் பார்த்து அம்பிகா சொல்வார், 'எல்லாத்தையும் தீர்த்துடாத. அம்மாவுக்கு ஒரு கட்டிங் வை. வர வர சரக்கடிக்காம தூக்கம் வர மாட்டேங்குது'. மற்றொரு காட்சியில் 'அவனுக்கு அவன் குஞ்சு மணிய புடிச்சு ஒழுங்கா ஒன்னுக்கு கூடப் போகத் தெரியாது'. இந்த மாதிரியான வசனங்களால் முழுக்க முழுக்க நிரம்பியிருக்கிறது முதல் பாதி. இதுக்குப் பேர் தான் நகைச்சுவையா? இதற்கு எதுக்கு அய்யா பாலாவும் எஸ்.ரா வும் தேவை. இதனை எங்களால் வேறு படங்களில் பார்க்க முடியாதா? சிரிப்பு வந்தால் கூட பரவாயில்லை. சிரிப்பும் வராதா வக்கிர வசன்கங்கள். இப்படி இருந்தால் உடனே அது எதார்த்தம் ஆகிவிடுமா? எதார்த்தம் என்பதை முழுக்க முழுக்க தவறாகப் பயன்படுத்துவது இது தான்.
பாலாவின் நகைச்சுவை தரமே முற்றிலும் இல்லாமல் நகைச்சுவையை திணிக்க முயற்சித்து சொதப்பியிருக்கிறார்கள். இங்கே இரண்டு விஷயங்களைக் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது.
முதலாவது : மலைவாழ் இனத்தவரின் இயல்பு வாழ்வில் நகைச்சுவை இப்படித் தான் இருக்கும் என்று சொல்லலாம். இருக்கட்டும். மலைவாழ் இனத்தின் வாழ்வை சார்ந்து கதை நகர்த்த முடிவு செய்தவன் அதனை சுவாரஸ்யமாகக் கொடுக்க முடியும் என்ற அடிப்படையில் செய்திருக்க வேண்டும். அது தான் எதார்த்தம் என்று எண்ணிப் பார்த்து எந்த ரசிகனாலும் ஒரு படைப்பை ரசிக்க முடியாது.
அடுத்தது, நகைச்சுவையில் புது வகை. சரி தான். அதற்காகவும் ரசித்துவிட முடியுமா? உணவு புது வகையாய் இருந்தால் என்ன, அதன் பெயர் கவர்ச்சியாக இருந்தால் என்ன. சாப்பிட நன்றாக இருக்க வேண்டுமே. புது வகை நகைச்சுவை என்ற ஒரு Fact ஐ மட்டும் வைத்துக் கொண்டு பாராட்ட முடியாது. என் நண்பன் ஒருவன் 12B படமும், விருமாண்டி படமும் தரத்தில் சமம் என்பான். ஏனென்றால் இந்த இரண்டு படங்களிலும் தத்தம் இரண்டு கதைகள் சொல்கிறார்கள் என்பான். Factஐ வைத்து விமர்சித்தால் இப்படித் தான் இருக்கும்.
படத்தில் முக்கால்வாசி அளவிலான இந்த நகைச்சுவை முயற்சிகள் ஆக்கிரமிக்கின்றன. சிரிக்கவைக்கும் ஓரிரு நகைச்சுவைகளும் (Liarரை Lawyer என்று புரிந்துகொள்ளும் போலிஸ்) சந்தானம் வகைக் காமிடி. சரி இவை தாம் நன்றாக இல்லை என்று பார்த்தால், பொதுவாக பாலாவிடம் எதிர்பார்க்கும் எதுவுமே இங்கு நடக்கவில்லை. காட்சியமைப்பு, கதைக்களம், இயல்பான நடிப்பு என்று எதுவுமே இதில் இருப்பதாகத் தெரியவில்லை.
விஷால் நடிப்பு மட்டுமே இதில் பாராட்டத் தகுந்தது. அதையும் சில இடங்களில் யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த கான்ஸ்டபிள் கதாநாயகி ஓவர் ஆக்டிங். அது சரி, அவர் வரும் காட்சிகள் அனைத்துமே செயற்கையானவை அதில் அவரது நடிப்பை எங்கே குறை சொல்வது? பாலா படங்களில், அவர் ஹீரோயின்களை சித்திரவதை
செய்துவிடுவார் என்று விளையாட்டாகச் சொல்வோம் (நான் கடவுள் பூஜா). அது படத்திற்கு அவ்வளவு தேவையானதாக இருக்கும். இங்கேயும் ஒரு ஹீரோயினை எதாவது பண்ண வேண்டுமென்று நினைத்துவிட்டார் போலும். குட்டிக்கரணம் அடிக்க வைத்து சித்திரவதை செய்கிறார். நம்மையும்.
இப்படியே முல்லாவாசிப் படம் முடிந்துவிட, கடைசியில் திடீரென மாறுகிறது. எப்படியாவது படத்தை முடிக்க வேண்டுமே. அதற்காக கடைசி அரை மணி நேரம் நன்றாக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். அதுவும் கொடுமை. கடைசி அரைமணி நேரம் ஒரிஜினல் பாலா படம் என்று யாரவது சொன்னால் அது தான் பாலாவை மேலும் அசிங்கப் படுத்துவது.
நண்பன் ஒருவன் கூறுவான் 'பாலாவுக்கு படத்தின் முடிவில் எவனையாவது கொல்ல வேண்டும். அப்ப தான் நிம்மதி' என்று. இது எல்லா பாலா படங்களிலும் நடந்ததுண்டு. இருப்பினும் நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். காரணம் இதுவரை அவை வேண்டுமென்றே இல்லாமல் கதைக்குத் தேவையானதாகவோ அல்லது கதையே ஆனாதுமாகவோ இருக்கும். ஆனால் இங்கே. திடீரென ஒரு பிரச்சனையை பிறக்கிறது, திடீரென வில்லன் . திடீரென கொலை. திடீரென பழிவாங்குதல். இந்தப் படம் பொறுத்தவரை அந்த நண்பனின் கமெண்ட் முற்றிலும் உண்மை.
இந்த காட்சிகளின் வக்கிரமும் முழுக்க முழுக்க செயற்கையானவை. தேவையற்றவை. பிதாமகன் படத்தில் விக்ரம் வில்லனின் தொண்டையைக் கடிப்பார். அந்த காட்சியில் வலிமை உண்டு. விக்ரமின் கதாப்பாத்திரம் படம் முழுக்க அப்படிக் காட்சியமைக்கப் பட்டிருக்கும். சூர்யா மீதான நட்பும் வலியுறுத்தப் பட்டிருக்கும். அதற்கு அவ்வகை வக்கிரம் சரி. ஆனால் இங்கே கொலையும் தேவை இல்லை, வக்கிரமும் தேவை இல்லை. எல்லாமே செயற்கை.
இது பாலாவின் திறனை மிகவும் சந்தேகத்திற்கு ஆட்படுத்தும் படைப்பு. இதற்கு முந்தைய பாலா படங்கள் அனைத்தையும் மிகவும் ரசித்தேன். ஆனால் இப்பொழுது உண்மையில் அவரின் காலம் முடிந்துவிட்டதா என்ற எண்ணம் கூடத் தோன்றுகிறது. நிச்சயம் 'அவன் இவன்'க்கு முன்பிருந்த அவனில்லை இவன். .பாலா இனி அவர் பாணியிலேயே படம் எடுத்தால் நல்ல படைப்புகள் கொடுக்க வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்.
'அவன் இவன்' பாலாவின் பெயரில் படிந்த தூசி.