Friday, April 20, 2012

ட்விட்டர் புத்திஜீவிகளுக்கு சமர்ப்பணம் :



முதலில் ட்விட்டர் புத்திஜீவிகள் என்றால் யார்? எவ்வாறு அவர்களைக் கண்டுபிடிப்பது? நாம் அப்படி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

o    முதல் பாயின்ட். நீங்கள் எந்த தனிக் கீச்சுகளும் போடக் கூடாது. அதாவது one liner கீச்சுகள் என்றால் அவர்களுக்கு ஜென்ம விரோதம். அந்த விரோதத்தை வெளிப்படுத்த இம்மாதிரியான கீச்சுகளை தத்துவம், வ.பா, மொக்கை, கவிதை என்று பல்வேறு வகைப் படுத்தி திட்டிவிடுவார்கள்.

o    அடுத்தது.. ஏதாவது ஒரு நிகழ்வையோ தலைப்பையோ பின்புலமாக வைத்து பொதுவாக ட்வீட்ட வேண்டும். 
எ.கா: 'இப்பவே கண்ண கட்டுதே' , ' அடப்போங்க டா '
இப்படி ஒரு ட்வீட் போட வேண்டும். அது என்ன நிகழ்வு என்றெல்லாம் குறிப்பிடத் தேவை இல்லை. ஏனென்றால் ஃபாலோயர்கள் என்பவர்கள் மூடர்கள் தானே. 

o    அடுத்தது.. ஏதாவது ஒரு தளத்தில் உள்ள ஒரு பதிவைப் படித்துவிட்டு அங்கே போட வேண்டிய கமெண்ட்டை இங்கே வந்து ட்வீட்டாகப் போட வேண்டும். இதில் மிக முக்கியமான விஷயம்.. அதன் பின்னணியான பதிவின் சுட்டியை மட்டும் கொடுத்துவிடவே கூடாது. எதைப் பற்றி பேசுகிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டால் பின்பு நம்மை யார் புத்திஜீவி என்று ஒத்துக்கொள்வார்கள்?

o    அடுத்தது.. விவாதங்கள். டைம்லைனில் ஏகபோக விவாத வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கும். அதில் ஏதாவது ஒன்றில் ஏறி உங்கள் சேவையை நிறுவ வேண்டும்.

o    பல வண்டிகளில் பயணம் செய்தீர்களானால் மிகவும் சிறப்பு. அதும் ட்விட்டரில் விவாதங்கள் எவ்வளவு நேர்த்தியாக சிறப்பாகப் பயணிக்கும் என்பது நாம் அறிந்ததே. அந்தக் கொடூரத் தொனியை சிதைக்காமல் விவாதிக்க வேண்டும். 

o      அடுத்த முக்கியமான விஷயம் இலக்கியம். சாரு வீட்டு நாய்கள் இன்று புணர்ந்தன என்கிற செய்து தெரிந்தால் கூட அதனை வைத்து பெரிய விவாதம் நடத்தி தன் இலக்கிய ஈடுபாட்டைக் காட்ட வேண்டும். இலக்கிய ஈடுபாடு என்பது மிக மிக முக்கியம். இதுவும் முன்னே சொன்னது போல யாருக்கும் புரியாவிதம் அமைந்தால் சிறப்பு.

o    இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் .. இங்கே முக்கியமான, நாட்டைப் புரட்டிப் போடுகிற விஷயங்களை மட்டும் பேசி இந்தியாவை வல்லரசாக்குவேன் என்கிற பாணியில் போலி நாடகம் ஆடுவது. இந்த ஆட்டம் மிகவும் கவனமாகக் கையாள வேண்டியது. அப்படிக் கையாண்டால் மிகவும்  செளகர்யமானது.. 

எப்படிஎன்றால்.. யாரேனும் மிகவும் ரசிக்கும்படி ஒரு கீச்சு போட்டால் கூட.. எடுத்துக்காட்டுக்கு எனக்கு மிகவும் பிடித்த கீச்சுகள் இரண்டு குறிப்பிடுகிறேன் : 

@cheethaa வின் கீச்சு : 'அத்தனைக்கும் ஆசை. படு'. 
@araathu வின் கீச்சு : 'தேவதைக்கு வயதானால் வயதிற்கு வந்த பெண்ணாக மாறிவிடுகிறாள்'

இம்மாதிரியான கீச்சுகளை சுலபமாக மொக்கை என்று வகைப்படுத்தி விடலாம். நாம் தான் முக்கியமான விஷயங்களைப் அலசி நாட்டைப் புரட்டிப் போட இருக்கிறோமே.. அப்படியானால் இந்த ட்வீட் எல்லாம் மொக்கை தானே? நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது இவர்கள் எப்படி தேவதை, படு என்றெல்லாம் மொக்கைப் போடலாம்? நாட்டில் பேசுவதற்கு பிரச்சனைகளா இல்லை?. அதனால் இம்மாதிரியான கீச்சுகள் மொக்கைகள் தான். நமக்கு விவாதிக்க தலைப்பு இல்லையென்றால் கூட இவற்றினை மொக்கை என்று பேசி பொழுதைப் போக்கலாம். ஆனால் இம்மாதிரி கீச்சுகள் மட்டும் எழுதக் கூடாது. 
அப்பொழுது தான் புத்திஜீவிகள் ஆக முடியும்.


மேலே சொல்லப்பட்ட விதிகளை பின்பற்றி வரும் புத்திஜீவிகள் என் கீச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவாறே இருந்தார்கள். அதாவது என்னுடைய பிரதானமான கீச்சுகள் கீழே குறிப்பிட்டுள்ள வகை : 

  • கேள்வி: ஆஸ்காருக்கு ரகுமான் தகுதியானவரா? பதில்: ஆஸ்காரின் தகுதியே அவ்வளவு தான்.
  • மதச் சாம்பிராணி.
  • நம் ஊரில் பஸ் கொளுத்துவது சுலபம். கண்ணீர் விடுவது தான் கடினம்.
  • கடவுள் மார்க் எல்லாம் நிறைய வாங்கிவிட்டார். Attendance தான் 0%.
  • வெற்றி-தோல்வி முக்கியமில்லை என்று வென்றவனிடம் யாரும் சொல்வதில்லை
  • கிடைத்த உடனே மாறிவிடுகிறது 'தேவை'
  • இது வெறும் ராக்கெட் சைன்ஸ் தான். பெண்ணின் மூளை அல்ல


உலகின் தலையாய பிரச்சனைகளுக்கு ட்விட்டரில் விடை தேடும் புத்திஜீவிகளின் கண்களுக்கு இவை எல்லாம் எப்படித் தெரியும்? மொக்கையாகத் தானே.
ஆஸ்கார், பெண், தோழி, கடவுள் போன்றவை எல்லாம் தேவையா? எனவே அவர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் இவற்றினை தத்துவம், மொக்கை, வ.பா என்று வகைப்படுத்தி எதிர்த்து தங்களுக்கேயான புத்திசாலி பட்டத்தை தக்கவைத்துக் கொள்வார்கள்.

சரி.. இவர்கள் பக்கம் என்ன நியாயம் தான் இருக்க முடியும் என்று அவர்கள் வழியில் சென்றுப் பார்த்தேன். அட.. எதிர்பார்த்தவாறு எதிர்ப்புகளே இல்லை. எவ்வளவு ஜாலியாக கீச்சுகளே போடாமல் வாழ முடிகிறதே... ஆச்சர்யம்..!

புத்திஜீவிகளிடம் இருந்து எதிர்ப்பே வராமல் இருப்பதற்கு எப்படிக் கீச்ச வேண்டும் என்று பார்க்கலாம். இதற்கு புத்திஜீவிகள் பாணியிலேயே ட்வீட் போட வேண்டும். அதாவது :


o    நாள் முழுக்க பல வண்டிகளில் ஏறி இறங்கி அரட்டை மட்டும் செய்ய வேண்டும். ஜி-டாக் உபயோகிப்பதை மறந்துவிட வேண்டும். அதான் ட்விட்டர் இருக்கிறதே. 

o    டீ குடிக்கிறேன், மழை பெய்கிறது என்று ஸ்டேடஸ் அப்டேட் போட வேண்டும்.

o    யாரோ ஒருவன் கேட்ட கேள்விக்கு அவனுக்கு பதிலளிக்காமல் பொதுவாக ட்வீட் போட வேண்டும். 

o    ஒரு நாளைக்கு நாலைந்து பேரை திட்ட வேண்டும். அதுவும் பெயர் குறிப்பிடாமல் பொதுவாகத் திட்ட வேண்டும். படித்துக் குழம்புது யார்? ஃபாலோயர்கள் தானே. அவர்களை மூடர்கள் ஆக்குவது தானே நம் வேலை.

o    எங்காவது எடுத்த புகைப்படத்தை பகிர வேண்டும்.

நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் பகிலராம், இணையத்தில் புரளும் காமெடிகள் பகிரலாம், கிரிக்கெட் மேட்ச் பார்த்து ட்விட்டரில் லைவ் கமெண்ட்ரி கொடுக்கலாம், எதிர்கீச்சு போடலாம், யாருக்கோ கீச்சு போடலாம்... ஆனால் கீச்சுகள் மட்டும் போடக் கூடாது. 

இப்படியும் ஒரு உலகமா என்று எனக்கு ஆச்சர்யமாகத் தான் இருந்தது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இதைத் தான் புத்திஜீவிக்கூட்டமும் பெரும்பாலும் செய்துகொண்டிருக்கிறது. சரி..இப்படி இருந்து பார்ப்போமே என்று இருந்தால், நினைத்து போலவே அதீத வரவேற்பு. ஆஹா.. இதுவல்லவா வரம் என்பதுபோலாகிவிட்டது. ட்வீட்டே போடாமல் நாள் முழுக்க உலா வரலாம். அதுமட்டுமல்ல அப்படிக் கீச்சுபவர்களையும் மடக்கிப் பிடித்து விளாசலாம். அவர்களை விமர்சித்து நாம் புத்திஜீவி ஆகிவிடலாம். என்ன ஒரு சுகம். 
புத்திஜீவிகள் மனம் வைத்தால் அவர்கள் சபையில் ஒரு சீட்டு கூட கிடைக்கும். நாளைக்கு மந்திரியா கூட ஆகலாம்.