கிட்டத்தட்ட அனைவரும் நந்தாலாவைப் பற்றி பேசி முடித்துவிட்ட சமயம், நான் இப்பொழுது தான் எழுதத் துவங்குகிறேன். பொதுவாக பதிவுகள் எழுத்தத் தயங்கும் ஒரே காரணம்... சோம்பேறித்தனம் தான் வேறென்ன. அதனையும் மீறி இதனை எழுதத் துவங்கும் ஒரே காரணம்... நன்றியுணர்வு தான் வேறென்ன. ஒரு பார்வையாளனாக வெகு நாட்கள் கழித்து நல்ல படைப்பொன்றை ரசித்தமைக்கு இருக்கும் உணர்வே.
நந்தலாலா படம் பார்ப்பதற்கு முன்னர் நமக்கே தெரியாமல் நம் மனதிற்குள் ஒளிந்திருக்கும் சினிமாவிற்கான கோட்பாடுகள் அனைத்தையும் அழித்திட வேண்டும். குறைந்தபட்சம் தமிழ் சினிமாவிற்கான கோட்பாடுகளை. அதாவது படத்தின் முதல் காட்சிகள் இப்படி இருக்க வேண்டும், படத்தின் கதைக்களன் இவ்வாறு, பத்து நிமிடத்தில் கதை இவ்வளவு நகர்ந்திருக்க வேண்டும் போன்ற முன்முடிவுகளை மறந்திடவும்.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகத்துல்லியமாக, நிதானமாக, எதார்த்தமாக காட்சிகள் நகர்கின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சுவாரஸ்யத்திற்காக ஒரு காட்சி கூட சேர்க்கப் பட்டதாகத் தெரியவில்லை. தாய்மையைச் சொல்லும் கதை என்பதோ, பயணத்தை மையமாகக் கொண்ட கதை என்பதோ இதற்கு ஒரு கவர்ச்சி சொல்லாடலாக இருக்கலாம். உண்மையில் இது ஒரு அனுபவம். வாழ்க்கையைப் போல. படம் பாதி நகர்கையிலே பார்க்கும் சிலர் ..'என்ன தான் சொல்ல வர்றாங்க?' என்று முனகும் சத்தங்கள் கேட்டன. வாழ்க்கை செல்லும் வேகத்தை, திசையை, இயல்பை, மாறுதல்களைப் பார்த்து அவர்கள் இயற்கையை வினவும் கேள்வி தான் அது.
கடைசி பத்து நிமிடங்கள் கதை என்று சொல்லிக்கொள்ள உதவலாம். படம் முழுக்க நடக்கும் பயணமே கரு என்று சொல்ல உதவுகிறது. படத்தின் பயணத்தில் ஒட்டுமொத்தக் காட்சிகளைச் சேர்த்தால் அதில் சொல்ல முயல்வது பிரம்மிப்பூட்டுகிறது. காரணம் ஒன்று தான். எதார்த்தம் பிரம்மிப்பூட்டும் நிலையில் தான் தமிழ் சினிமாவும் அதன் ரசிகர்களும் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் இதில் நம் சமூகம் பற்றிய உணர்வு, மனித குணங்களின் இயல்பு, மனித நேயத்தின் அழுத்தம், தனிமையின் உச்சம் என்று அனைத்துமே மிகச் சுலபமாக ஆனால் அழுத்தமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கையைப் போல எதார்த்தமான பயணம் என்றால் அதனை வாழ்க்கையிலே பார்த்துக்கொள்வேன், சினிமா எதற்கு என்று கேட்பவர்களுக்காக இது.
போக இவை அனைத்தையும் அவரின் தனி பாணியிலே நகர்த்திச் செல்கிறார் மிஷ்கின். விரலை சுவரில் உரசிக்கொண்டே நடப்பது (பின்னர் தாயை தூக்கிக்கொண்டு நடக்கையில் தாயின் கால் விரல்கள் உரசுவதும்), பிச்சையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அதனை மிரட்டி வாங்குவது, சில்லறையை மட்டுமே பணம் என்று நம்பும் அறிவு, கடவுளின் சிலைக்குரிய விளக்குகளை எடுத்துச் செல்வது, ஏன்...முக்கால்வாசி படத்தில் போட்டிருக்கும் பேண்டை கையில் பிடித்துக்கொண்டே நடப்பது உட்பட அனைத்துமே எளிமையான எதார்த்த கவர்ச்சிகள். மிஸ்கின் உண்மையாகவே நடித்திருக்கிறார்.
- அங்க பார்.அழுது அழுது சிரிச்சுருச்சு..
- இது உங்க அம்மான்னு பட்டி சொன்னாளா? இது உங்க பாட்டின்னு யார் சொன்னா? அம்மா சொன்னாளா?
- 'ஃபோட்டோ எப்படி முத்தம் கொடுக்கும்?' 'நீ மட்டும் ஃபோட்டோக்கு முத்தம் கொடுக்குற?'
போன்ற வசன்கங்கள் நிஜமாக ரசிக்க வைக்கின்றன.
நந்தலாலாவின் இசையை பேசாவிட்டால் அது 'நந்த'வைப் பற்றி மட்டும் பேசியதுபோலாகிவிடும். நந்தலாலா என்ற வார்த்தையை எழுதிய அடுத்த வினாடி இளையராஜா என்ற பெயர் தான் எழுதினேன் என்றார் மிஸ்கின்(படத்தின் டைட்டில் கார்டிலும் அவ்வாறே), உண்மையில் இளையராஜா என்ற வார்த்தைக்கு அடுத்து நந்தலாலா என எழுதியிருந்தாலும் தப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது இசை. இசை என்ற வார்த்தைக்கு இங்கு முழு அர்த்தம் 'பின்னணி இசை' என்றே கொள்ளலாம். 'ராஜாவின் இசை இல்லாமல் படமே இல்லை' என்பது பொய் தான். அனாலும் அதனை உண்மையைப் போல சொல்லத் தூண்டும் இசை. அதுவே அதன் சிறப்பு. உண்மையில் கதை மிஷ்கின் என்றால் கதாநாயகன் ராஜா எனலாம். படம் நகர்த்திச் செல்லும் பயணம், உணர்த்தப்படும் வலிமை இவற்றினுடன் ராஜாவின் பின்னணி இசை உண்மையான உணர்வுக்கு அருகே நகர்த்திச் செல்கிறது. இன்னும் சில காட்சிகளில் அமைதி அழகு.நந்தலாலாவைப் பொறுத்தவரை வசனம் பேசுகிறது. இசை வழியுறுத்துகிறது. அமைதி கற்பிக்கிறது.
மிஷ்கின் தனது தாயை சந்திக்கும்போது வரும் பாடல் முற்றிலும் ஏமாற்றமே. ராஜா ரசிகனாக ஒருவனின் எதிர்பார்ப்பு சேதுவின் 'வார்த்தை தவறிவிட்டாய்' அளவிற்கு இருக்கும். படத்தின் உணர்வு நிற்கும் இடம் கிட்டத்தட்ட அவ்வளவிலான ஒரு பாடலை வேண்டுகிறது. ஆனால் கிட்டவில்லை. பின்னணி இசைக்காக மன்னிக்கலாம். பிதாமகன் படத்தின் பின்னணி இசையை மிஞ்சுமா என்ற ஆவலோடு சென்றேன். 'கிட்டத்தட்ட' என்ற பதில் கொடுத்த ராஜாவுக்கு நன்றி.
தாய்மை பற்றிய படம்/ சோகப் படம்/ அழுகை தரும் படம் என்று வகைப்படுத்துவோர்...அழுகை தருவதை நல்ல படத்திற்கான அளவுகோலாகக் கொள்வோர் போன்றோர் மாறக் கிடைத்த வாய்ப்பு வேஸ்ட். படம் நகர்த்திச் செல்லும் பயணத்தின் அர்த்தம் புரிந்தால் இந்த வகைகள் எதிலும் அடங்காத சிறந்த படைப்பு நந்தலாலா. நன்றி மிஷ்கின்.
No comments:
Post a Comment