Saturday, October 25, 2008

கடவுள் ?!

கடவுள் என்பது உண்மை என்றும் கற்பனை என்றும் வெகு காலமாக நடந்து வரும் விவாதத்திற்கு இரு கூட்டங்களை சேர்ந்தவர்களும் அவரவர்க்கு நியாயமாக படும் கருத்துகளை சொல்லி வருகிறார்கள்.

கடவுள் உண்டா என்ற கேள்விக்கு 'ஆமாம்' என்றும் 'இல்லை' என்றும் சாத்தியமான பதில்கள் இரண்டு.இந்த கேள்விக்கு மற்றொரு உண்மையான பதில் 'தெரியாது'

இத்தனை காலமாக ஒரு நிரந்தர விடை காண இடம் கொடுக்காமல் விவாதம் மட்டுமே நடத்த அனுமதி வழங்கிய இந்த கேள்விக்கு ஒரு பதில் கொடுக்கும் முயற்சியில் நான் ஈடுபடபோவதில்லை.



இதை பற்றி ஏதேனும் எழுத முற்படும் முன், இந்த கேள்வியை முதன் முதலில் உலகிற்கு கொண்டு வந்த பகுத்தறிவாளர்களுக்கு என் நன்றியை சொல்லி கொள்கிறேன்.
உங்களுடைய இந்த முற்போக்கு சிந்தனைக்கு என் ஆச்சிர்யம், பாராட்டு அனைத்தும் சமர்ப்பணம். அதற்கு முன் உங்களுக்கு சில விஷயங்களை நினைவு படுத்த விரும்புகிறேன்...

- உனது கடவுளை விட எனது கடவுள் தான் பெரிது என்று நம்பிக்கைக்கு
எடுத்துக்காட்டாக திகழும் மகான்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- முயற்சியால் கிடைக்காத வெற்றி அறை ஜான் கயிற்றினால்
கிடைக்கும் என்று நினைக்கும் மேதைகளின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- தன்னை வருத்திக் கொண்டால், பதிலாக தனக்கு நன்மை தருபவன் என்று
மனத்திரையில் கடவுளுக்கு வில்லன் கதாபாத்திரம் குடுத்திருக்கும்
பக்தர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- புண்ணியம் கிடைக்கும் என்று நம்பும் ஒரே காரணத்திற்காக பிறருக்கு சில
நன்மைகலேனும் செய்யும் பொதுநலக் காரர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.

- சரித்திரக் கதைகளில் வரும் மாயாஜாலங்களை அப்பட்டமாக நம்பி வரும்
சிந்தனையாளர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- 90 சதவிகிதத்தினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பினும் உலகில்
நடைபெறும் குற்றங்களை எந்தவித குறைபாடும் இல்லாமல் நடத்தி வரும்
நியாயமானவர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

-அன்றாடம் கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு, தப்பு செய்யும் தருணங்களில் மட்டும் ( அதனால் கிடைக்கும் லாபம்/சுகம்/திருப்தி ஆகியவற்றை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் ) கடவுளை மறந்து விடும் நல்லவர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

- கற்பனையா உண்மையா என்று தெரியாத ஒன்றிற்காக உண்மையில் இருக்கும் மனிதர்களை வெட்டிச் சாய்க்கும் வீரர்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இவை அனைத்தும் என்றாவது ஒழியும் என்றால்,அன்றைக்கு இந்த தலைப்பைப் பேச நாம் தகுதி பெற்றவர்கள் ஆவோம். அந்நாள் இந்நூற்றாண்டின் தேதிகளில் இடம் பெறுவது சந்தேகம் தான் எனினும், என்றேனும் நிகழப்போகும் அந்த நாளுக்காக சிறிது பகுத்தறிவை மிச்சம் வைப்போம். அது வரை இவ்விதிமுறைகளை மாற்ற முற்படுவோம். கடவுளின் பெயரால் நடக்கும் உயிர் சேதங்களைத் தவிர்ப்போம். அரிவாள் பேசுவதை நிறுத்தி, அறிவால் பேசத் துவங்குவோம்.

5 comments:

Seer said...

good post and a great blog da..

**
Man is a dog's idea of what God should be. -Holbrook Jackson

-Seer
http://seer.blog.co.in

செந்தில் நாதன் Senthil Nathan said...

உங்கள் கருத்துக்கள் சரியே.

நாங்களும் கொஞ்சம் ஆன்மிகத்தை சேர்த்து வைக்கிறோம். இந்த வெட்டி சண்டைகள் எல்லாம் முடிஞ்ச பின் நாம் விவாதிக்கலாம்.

ஏனோ அந்த நாளை பார்க்க நான் இருக்க மாட்டேன் என்று தோனுகிறது.நல்ல பதிவு, நன்றி நவீன்.

உமா கிருஷ்ணமூர்த்தி said...

யாரையும் காயப்படுத்தாத விதத்தில் இதை பதிவு செய்ததற்கே பாராட்டுகிறேன்.ஒரு சில அறிவு ஜீவிகளைப்போல் அல்லாமல் உங்கள் யதார்த்தமான எண்ணங்களை பதிவு செய்ததற்கு வாழ்த்துகள்

sowmya said...

யதார்த்தமான கருத்துகள். பதிவு அருமை.

/தப்பு செய்யும் தருணங்களில்
மட்டும் ( அதனால் கிடைக்கும்
லாபம்/சுகம்/ திருப்தி ஆகியவற்றை விட்டுக்கொடுக்க
மனமில்லாமல் )
கடவுளை மறந்து விடும்
நல்லவர்களின் மத்தியில் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்./

இதுதான் இன்னும் தொடரப் போகும் நிஜம்

vinoth said...

கடவுள் இருக்கிறார் , அவர் தப்பு செய்தல் கண்ணை குத்திவிடுவார் என்கிற பயம் இருந்தால் தான் தப்புகள் குறையும் என்று , மக்கள் செய்யும் தவறுகளை தடுக்க , குறைக்க , மக்களால் உருவாக்கப்பட்ட சோலைகாட்டு பொம்மையின் பெயர் தான் கடவுள்......