Saturday, June 5, 2010

அங்காடித் தெரு - கேள்வி ..!

அன்புள்ள ஜெ ,

சமீப காலமாக உங்கள் இணையதளத்தை தொடர்ந்து படித்தும் மகிழ்ந்தும் வருகிறேன். அதற்கான ஒரு முக்கிய காரணம், இங்கே பேசப்படும் விஷயமும், பேசும் விதமும் மக்களின் சாதாரண சிந்தனை தளத்திற்கு ஒரு படி மேல் இருப்பதாக தோன்றும் உணர்வுகளே.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். அங்காடித் தெரு படத்தை பார்பதற்கு முன்னரே உங்கள் தளத்தில் வரவேற்பு விமர்சனங்களைப் படித்தேன். நான் இப்பொழுது சொல்லப்போவது மற்றவர்கள் போலானது அல்லாமல், ஒரு எதிர்மறைக் கருத்து தான்.

கொடுமைகளும், அதன் நடுவில் இயல்பு காதல்களும் படத்தில் நன்றாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
'மூர்த்தி சிறுசானாலும்' என்று பாதியில் முடிக்கப்பட்ட வாக்கியம், 'கனி இருப்பக் காய் கவர்ந்தற்று' போன்ற வசனங்கள் வெகுவாகக் கவர்ந்தன.

படம் பார்த்து முடித்ததும் என்னுள் பல எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன. முதல் விஷயம், இப்படத்தில் வெகுவான பாராட்டிற்கு தகுதியென ஏதேனும் உண்டா என்று.
அதாவது, தமிழ் திரையுலகம் இப்பொழுதுள்ள கொடூர நிலையினாலும், மசாலாவின் ஆதிக்கத்தாலும் இது போன்ற எதார்த்த முயற்சிகளுக்கு நல்ல பெயர் எளிதில் கிட்டுகின்றனவா? இக்கேள்வியை பொறுத்தவரையில் எனக்கு பதில் 'ஆம்' என்று தான் தோன்றுகிறது.
'அப்படி என்ன இந்த படத்தில் உள்ளது?' என்று யாரேனும் கேட்டால், உடனே இதை மசாலாப் படங்களுடன் ஒப்பிட்டு இதன் தரத்தை சற்று உயர்த்த வேண்டி இருக்கிறது. அப்படியான தரைமட்ட படங்கள் முற்றிலும் இல்லை என்றால், இப்படத்திற்கு இத்தனை பாராட்டுகள் கிட்டியிருக்குமா என்ற கேள்வியும் தோன்றுகிறது.
இது அல்லாது, வித்யாசமான கோணல் என்று கண்டதுமே அதை பாராட்ட ஒரு கூட்டம் இருக்கும். அதன் பங்கும் இதில் அதிகமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்னொரு விஷயம் சோகம்.
சேது, பருத்தி வீரன் போன்ற படங்களில் உள்ள சோகம் எதார்த்தம் அழிப்பவை. இன்னும் சொல்லப் போனால், அதன் சிறப்பு சோகத்தில் தான் அடங்கி உள்ளது.
அதற்கும் அடுத்த நிலையில் சோகங்கள் இடம் பெறுவதாக நான் நினைக்கும் படங்கள் 'வெண்ணிலா கபடி குழு, ரேணிகுண்டா' போன்றவை. அதன் முடிவுகளில் துக்கம்-இன்பன் இரண்டும் சமநிலை பாதிப்புகளையே உண்டாக்கும் எனத் தோன்றுகிறது. இருப்பினும் அவைகளின் சோக முடிவுகள் முக சுளிப்புகள் செய்யாதவை. ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லையே. எதார்த்தம் என்ற வார்த்தை தவறாக அல்லவா புரள்கிறது.

சினிமா என்பது பொழுதுபோக்கு, அதில் சோகத்திற்கு இடம் இல்லை என்று மொக்கை போடும் கூட்டத்தின் முட்டாள்தனம் இருக்கிறதே. அந்த கோட்பாடுக்கு எதிராக நம்மைப்போல் ஒரு கூட்டம் உண்டு. இந்த இரண்டாம் வகை கூட்டத்தின் ஆதரவு நிச்சயம் கிட்டிவிடும் என்ற எண்ணத்தில் தாறுமாறாக எதிர்வினைகளை திணித்துள்ளார் வசந்தபாலன். சோகம் என்பது நுழைந்தவுடனே எதிர்ப்பவர்களைப் போலத்தான், இங்கே சோகம் என்ற ஒன்றைக் கண்டதும் ஆதரிப்பவர்களையும் நான் பார்க்கிறேன்.

நான் முதல் வரிகளில் சொன்ன, 'உங்கள் இணையத்தில் சிந்தனை ஒரு படி மேல் ' என்பது இந்த விஷயத்தில் என்னை சற்று யோசிக்க வைக்கிறது.
பொதுவாக படங்களுக்கு நாம் தரும் மதிப்பெண் மக்களின் வரவேற்பின் பாதிப்பை சற்றேனும் உற்கொண்டிருக்கும். அதனால் இந்த படத்தைப் பெரிதார பாராட்டத் தோன்றாமல் இருக்கலாம். என் எண்ணத்தில் தவறிருந்தால் சுட்டிக் காட்டலாம். திருத்திக்கொள்ள தயங்க மாட்டேன் .

இவண்,
ந. நவீன் குமார்.

No comments: